Tuesday, July 7, 2009

சத்தமில்லாமல் ஒரு சமூகப் புரட்சி

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் கிராமம் தேக்கு மரத்திற்கு புகழ்பெற்றது. இனி இன்னொன்றும் இந்த கிராமத்தின் சிறப்பாக இடம்பெற உள்ளது. அதுதான் வரதட்சணையற்ற திருமணங்கள்.

ஆம், நிலம்பூர் கிராமத்தில் வரதட்சணைக் கொடுமை பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக அங்கு வரதட்சணையற்ற திருமணங்கள் அதிகளவில் நடந்து வருகிறது.

திருமணமங்கள் என்பது சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் மாறி ரொக்கத்திலும், சவரனிலும் நிர்ணயிக்கப்படும் காலமாகிவிட்டது. வரதட்சணை கொடுக்க முடியாத காரணத்தால் எத்தனையோ கன்னிகள் முதிர் கன்னிகளாகிவிட்டனர்.

இந்த வரதட்சணைக் கொடுமை இந்தியாவின் பல நகரங்களிலும் தலை விரித்தாடுகிறது. அதிலும் கேரளாவில் இது அதிகம். இதற்கெல்லாம் எங்கு வழி பிறக்கப் போகிறது என்றுதான் பல பெற்றோர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

வழி பிறந்துள்ளது நிலம்பூர் கிராமத்தில்.

சுமார் 40 ஆயிரம் பேர் வசிக்கும் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் கிராமத்தில், வரதட்சணை பிரச்சினையால் பல பெண்கள் 30 வயதாகியும் திருமணமாகாமல் இருப்பதும், மேலும், பல பெண்கள் பேசப்பட்ட வரதட்சணைக் கொடுக்காத காரணத்தால் விவகாரத்தாகி பெற்றோர் வீட்டில் வசிப்பதும், வரதட்சணைக் கொடுத்தே பல குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு அடி பாதாளத்தில் சென்றதும் அங்குள்ள கிராம பஞ்சாயத்து தலைவர் ஆர்யதன் சவுக்கத்தின் கவனத்திற்கு வந்தது.

முதலில் சொந்தமாக வீடில்லாமல் வாழ்பவர்களை கண்டறிந்தார். அவர்கள் ஏன் சொந்தமாக வீடில்லாமல் வாழ்கிறார்கள் என்பதை ஆராய்ந்த போது, பலரும், தங்களது மகள் திருமணத்திற்காக சொந்த வீட்டை விற்று வரதட்சணை வழங்கியிருப்பது தெரிய வந்தது.

வரதட்சணை பிரச்சினை இந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்திருப்பது குறித்து கவலைப்பட்டார். கவலைப்பட்டதோடு நின்றுவிடாமல், அதனை மாற்ற நடவடிக்கையும் எடுத்தார். வரதட்சணையை ஒழிக்கும் நோக்கத்தோடு ஒரு குழுவை அமைத்தார்.

இந்த குழுவினர், வீடு வீடாகச் சென்று வரதட்சணைக் கொடுமையால் பல குடும்பங்கள் சீரழிந்து கிடப்பதை எடுத்துக் கூறி, அதனால் எத்தனை பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதையும் பட்டியலிட்டனர்.

இதோடு நின்றுவிடாமல் வரதட்சணை விழிப்புணர்வை ஏற்படுத்தும் தெருக் கூத்துகள், திரைப்பங்கள் காட்டப்பட்டன.

முதலில் இதற்கெல்லாம் எந்த பலனும் இல்லாமல் இருந்தது. ஆனால் நாளடைவில் மக்களின் மனதில் சிந்தனை ஓடியது. விழிப்புணர்வு ஏற்பட்டது. அப்படி விழிப்புணர்வை அடைந்த மக்களிடம், வரதட்சணை வாங்க மாட்டோம், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதி மொழியும் வாங்கப்பட்டது.

அப்போதே அந்த கிராமத்தில் வரதட்சணை என்ற பேய் ஓடோடிவிட்டது.



கடந்த 2 மாதங்களில் வரதட்சணை கொடுத்து எந்த திருமணமும் நடைபெறவில்லை. ஏழைப் பெண்கள் சிலருக்கும் எளிய முறையில் திருமணமாகியுள்ளது என்பதுதான் அந்த கிராமத்தில் ஏற்பட்ட சமூக புரட்சியின் பலன்.

நிலம்பூர் கிராமத்திற்கு ஒரு விடிவெள்ளி தோன்றியது போல இந்தியாவிற்கும் ஒரு விடிவெள்ளி தோன்றினால் பல பெண்களின் வாழ்க்கை விடியும் என்பது உறுதி.